Wednesday, February 10, 2016

இலக்கிய கலந்துரையாடல் : கருப்பு மையில் ஒரு சிவப்பின் பிரதிநிதி



 புண்ணியவான் கோவிந்தசாமி....ஓர் இலக்கிய நிகழ்வில்தான் அவரை முதன்முதலில் சந்தித்தேன்.யாருக்கும் அடிபணியாத,அதே சமயம் எந்தப் போலி பணிவும் இல்லாத அவரது ஆளுமைதான் முதலில் என்னைக் கவர்ந்தது.அவரிடம் பேசிப்பழகியபோது அவரிடத்தில் கொட்டிக்கிடக்கும் நகைச்சுவை உணர்வை அதிகம் ரசிக்க ஆரம்பித்தேன்.இன்றைய இளம் தலைமுறைக்கு ஈடாக இணையத்திலும் பரவலாக உலா வந்து கொண்டிருக்கும் புண்ணியவான் ஐயாவிடம் எந்தத் தயக்கமுமின்றி வெகு இயல்பாக உரையாடவும்,வம்பிழுக்கவும் முடிந்தது..
      என் தோழிகளிடத்தில் அவரை என் மாமனார் என சொல்லிவைத்ததுண்டு.அந்த விசயத்தை அவரிடம் ஒருநாள் சொன்னபோது அன்று முதல் மருமகளே என விளிக்க ஆரம்பித்தார்.எனது சில படைப்புகளை விமர்சித்து,அதிலுள்ள குறைநிறைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
    அண்மையில் அவர் எழுதிய நாவலான செலாஞ்சார் அம்பாட் எனும் நாவலைப் படித்தேன்.எனக்கு புண்ணியவான் ஐயா எப்போதும் கலகலப்பான,குறும்புக்கார மனிதர்.அவரிடம் பேசினால் நாள் முழுக்க சிரித்துக்கொண்டே இருக்கலாம்.அந்த மனநிலையிலேயேதான் அந்த நாவலை வாசிக்க தொடங்கினேன்.ஆனால் அந்த நாவலைப் படித்த பிறகு புண்ணியவான் ஐயாவின் வேறொரு பிமபத்தை உணர்ந்தேன்.எல்லாவற்றையும் வெகு இலகுவாக,நகைச்சுவையாக எதிர்கொள்ளும் அவரிடத்தில் இவ்வளவு கனமான.நெகிழ்ச்சியடைய செய்யும் எழுத்தை நான் எதிர்பார்க்கவில்லை.அந்த நாவல் என் மனதில் சொல்லொணா வலியை ஏற்படுத்தி இரண்டு,மூன்று தினங்களுக்குத் தூங்கவிடாமல் செய்துவிட்டது..என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த நாவல் குறித்து அவருடன் ஓர் இலக்கிய உரையாடல் நிகழ்த்தும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது.
     இதுவரையில் எந்த இலக்கிய உரையாடலையும்,நேர்காணலையும் செய்த அனுபவம் எனக்கில்லை.நான் அதிகம் ரசித்து,படித்த இலக்கிய உரையாடல்கள் என்றால் அது மீராவாணி அக்காளின் படிவங்கள்தான்.மீராவாணி அக்காளின் ஆசியோடு புண்ணியவானுடனான இலக்கிய உரையாடலுக்குத் தயாரானேன்.
  ஓர் இரவுப்பொழுதில் இந்த உரையாடல் தொடங்கியபோது என் மனதில் முழுக்க முழுக்க அந்த நாவலும்,அதில் வந்த கதாபாத்திரங்களுமே முற்றுகையிட்டுக்கொண்டிருந்தன. அந்த நாவல் குறித்த பார்வையை மட்டுமே முன்நிறுத்தி நிகழ்த்தப்பட்ட அந்த உரையாடல் இதோ...
உதயா : வணக்கம் ஐயா
புண்ணியவான் : வணக்கம் மா.
உதயா:.என் காலக்கட்டத்தில் தோட்டப்புற வாழ்க்கை மிக மிக இனிமையானது என்றே நினைத்திருந்தேன்.உங்களின் நாவலைப் படித்த பின்னர் இவ்வளவு கொடுமையான தருணங்களை நம்மவர்கள் அனுபவித்து வந்திருக்கிறார்களா என கலங்கி நிற்கிறேன்.
புண்ணியவான் : ஆமாம். இது உங்கள் தலைமுறைக்கும் முன்னால் நடந்தது.
உதயா : இச்சம்பவம் நிகழ்ந்த காலக்கட்டத்தில் பதின்ம வயதிலிருந்த என் அம்மா கூட நம் முன்னோடிகள் கடந்து வந்த இந்தக் கருப்பு அத்தியாயங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை.சயாம் மரண இரயில் பற்றி அறிந்திருந்த அளவுக்கு யாருக்கும் செலஞ்சார் அம்பாட்அவலம் பற்றி தெரியவில்லை.
புண்ணியவான் : நம் வரலாறறை நாம் புதினமாக, சிறுகதையாக எழுதாததால் நேர்ந்த பிழை இது.
உதயா: இந்த நாவலை எழுதிமுடிக்க எவ்வளவு காலம் பிடித்தது உங்களுக்கு?
புண்ணியவான் : பதினைந்து நாட்கள்
உதயா : உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் புனையப்பட்டிருக்கும் இந்நாவலில் கூறப்பட்டுள்ளதைப் போன்று ஏறத்தாழ அந்த நாற்பது பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டனரா ஐயா?
புண்ணியவான் : ஆமாம். கிட்டத்தட்ட 40 பேர். கூடக்குறைய இருக்கலாம். கதைக்குள் பொருந்திவர நாற்பது என்று வைத்துக்கொண்டேன். அங்கு நடந்த முழு அவலம் யாருக்கும் தெரியாது. ஆனால் குழந்தை இறப்பு தவிர மற்ற அனைத்தும் நிஜத்தில் நடந்தவையே. குழந்தைக்கு பதில் அங்கே யாரோ இறந்திருக்கிறார்கள் என்பது எனக்குக் கிடைத்த செய்தி. 40 பேரில் குழந்தை இல்லாமல் இருப்பது யதார்த்ததுக்கு முரணாக இருப்பதால் குழந்தை பாத்திரத்தை புனைவு செய்தேன்.
உதயா : உங்கள் நாவலில் மணியின் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் வேலாயி,வயிறு கோளாறின்போது இயற்கை உபாதையைக் கூட கழிக்கமுடியாமல் சிரமப்பட்ட சாலம்மாள்,துணிந்து கேள்வி கேட்டு அடிவாங்கி விழுந்த முனியம்மா,சித்திரவதைக்கு ஆளான ராமய்யா எல்லாரையும் விட என்னை அதிகம் கலங்கவைத்த பாத்திரம் சிறுவன் தாமு.அந்தப் பாத்திரம் உருவான கதையைக் கொஞ்சம் பகிருங்களேன்...
புண்ணியவான் : எனக்குக் தாமு பாத்திரம் ஒரு புனைவுதான். ஒரு சிறுவனின் விளையாட்டு உலகம், கல்வி உலகமும் கைக்குக் கிட்டாத தருணம் எப்படி இருக்குமென்று சிந்தித்துப் பார்த்தேன். முதலில் தாமு பாத்திரம் தனித்து வாழும் தாய்க்கு எவ்வளவு சுமையானது என்பதைக்காட்டவே தாமுவை உள்கொணர்ந்தேன்.நாவல் நகர நகர அப்பாத்திரமே தன்னை வடிவமைத்துக்கொண்டது.தாமு பாத்திரம் உள்ளபடி செலாஞ்ச்சரில் இறந்த இன்னொரு பாத்திரத்தின் பிரதி. வேலைக்குப் போன ஓர் ஆள் அங்கே முறையான சிகிச்சை கிடைக்காமல், பராமரிப்பு இன்றி இறந்திருக்கிறார்.
உதயா : உங்கள் நாவலின் தாமு பாத்திரம் இன்னமும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.பூனைக்குட்டியும் உடன் வருமா என குழந்தைத் தனத்தோடு கேட்ட தாமு,கனவுந்தில் ஏறவேண்டுமென்ற தன் கனவு பலித்துவிட்டதாய் கும்மாளமடைந்த தாமு,அந்தக் கொட்டகையில் கொசுக்கடியிலும்,செம்பனைக் காட்டில் கற்கள் முள்புதரிலும் கஷ்டப்படும் தாமு,காலில் முள் குத்தி அவதிப்படும் தாமு,மயக்கமருந்தோ,மரத்துப்போகும் மருந்தோ இன்றி கால்புண்ணில் பட்டிருந்த சீழை எடுக்கும்போது பெரும் வலியை அனுபவித்த தாமு,எந்தத் தாயின் மடியை பாதுகாப்பாய் எண்ணி தஞ்சம் அடைந்தானோ அதே மடியில் துவண்டு இறந்த தாமு....என தாமு பாத்திரம் கதையைப் படித்து இரு நாள்களாகியும் என் மனதைவிட்டு அகல மறுக்கிறது.கண்மூடினாலும்,கண் திறந்தாலும் தாமு என்னை அழவைக்கிறான்.அந்தப் பகுதியைப் படிக்காமல் கடந்துவிட்டிருக்காலாமோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றி என்னை வதைத்துக்கொண்டே இருக்கிறது.இதோ இந்தப் பத்தியை எழுதும் இக்கணத்தில்கூட என் கண்கள் கசிந்து நிற்கின்றன. ஒரு வாசகனாக இந்நாவலை வாசித்தபோது தாமுவின் பாத்திரம் உங்களுக்குள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது?
புண்ணியவான் : உள்ளபடியே இந்தப் பாத்திரம் வளர வளர எனக்கும் சஞ்சலம் கூடிக்கொண்டே போனது. மிகையாகச் சொல்வதாக எண்ணவில்லையென்றால் தாமு இறப்பை நெருங்க நெருங்க நானும் அழுதேன். மேற்கொண்டு என்னால் எழுத முடியவில்லை. மூன்று நாட்களில் என்னை ஆசுவாசப்டுத்திக்கொண்டுதான் நான் தொடர்ந்து எழுதினேன்.நீங்கள் மட்டுமல்ல என் முதல் பிரதியைப் படித்த மனைவியும், நாவல் போட்டிக்கு வந்த தமிழ்நாட்டு நடுவரும் அழுது நாவலிலிருந்து சற்றே விலகி மறுநாள் தொடர்ந்து வாசித்ததாக சொன்னார்கள். எனக்கும் பிற வாசகர்களுக்கும் மிகுந்த அவஸ்தையைக் கொடுத்த பாத்திரம் தாமு.





உதயா : உங்கள் நாவலில் என்னைப் பிரமிக்க வைத்த இன்னொரு பாத்திரம் மானுடம் பத்திரிக்கை நிருபர் ராஜன்.அந்தப் பாத்திரம் பற்றி பகிருங்களேன்.
புண்ணியவான் : ராஜன் பாத்திரமும் உங்களைக் கவர்ந்திருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. அது ஓர் உண்மைப பாத்திரம். உண்மையில், நிஜ வாழ்க்கையில் தப்பி வந்த முனியம்மா அவரைத்தான் தேடியிருக்கிறார். ஆனால் நாவல் கதையாடலுக்கு அது யதார்த்தமாக அமையவில்லை. காட்டில் இருந்த ஒருவருக்கு எப்படி அந்த நிருபரைத் தெரியும் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே தப்பிக்க உதவிய அந்தக் கார் ஓட்டுனர் ராஜனோடு தொடர்பு கொண்டதாய் எழுத வேண்டியதாயிற்று. என் கற்பனை யதார்த்த நிலையில் இருந்ததால் இப்படி புனைந்துகொண்டேன். எப்போதுமே நாவலில் ஹிரோயிசம் வந்தால் அது நவீனக் கதை சொல்லாடலுக்கு முரணாக அமையும்.அதனால் அப்பாத்திரத்தை இறுதியில் கொஞ்சமாக எழுதிமுடித்தேன்.நாயகத்தனம் கதையைச் சினிமாத்தனத்தை கொண்டுவந்துவிடும்.


புண்ணியவான் : நாவலில் எந்த இடம் போர்?
உதயா : நாவலில் எந்த இடமும் எனக்கு போரடிக்கவில்லை ஐயா... வாழ்வாதாரம் தேடி கலங்கி நிற்கும் ஒரு தாயிடம் பின்னாள் தனக்கு நடக்கப்போகும் கொடூரம் அறியாமல் குழந்தை தாமு கேள்வி கேட்பதில் ஆரம்பித்தபோதே கதை சூடு பிடித்துதான் இருக்கிறது. கையில் எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்கமுடியாமல் உடனே படித்திட விழைந்தேன்.பொதுவாக இதுபோன்ற சமூக அவலங்கள்,கருப்பு வரலாற்றைச் சொல்லும் நாவல்கள் ஏதேனும் சில இடங்களில் கட்டுரைத் தன்மையில் நகர்ந்து கொஞ்சம் தொய்வை வழங்கக்கூடும்.ஆனால் உங்கள் நாவலில் சுவையும்,விறுவிறுப்பும் அதிகம் உள்ளது.
உதயா : கதை நீண்டுகொண்டே போகுமென்ற நிலையில் வலிந்து முற்றுப்புள்ளி வைத்ததாய் உங்கள் உரையில் சொல்லியுள்ளீர்கள்... இந்நாவலின் முடிவு இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது.ஒருவேளை அந்த அப்பாவி மக்களைப் போன்றே நானும் அவர்களின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்ததால் அந்தத் தருணத்தை இன்னும் விரிவாக எதிர்பார்த்தேனோ என்னவோ?உங்கள் பார்வையில் எப்படி?
புண்ணியவான் : நாவல் முடிவுறவில்லை. நாவல் முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டாலும் அந்த வாழ்க்கை சுகமாக முடியவில்லை. குடியுரிமை இல்லாமல் இன்னும் என்னென்ன அவலத்துக்கு ஆளாகப் போகிறார்கள் இந்த தப்பித்த சனம் என்ற வினா எழுகிறதல்லவா? அதுமட்டுமின்றி இன்னுமெத்தனை ஆயிரம் பேர் சிவப்பு அடையாள அட்டையோடு போராடுகிறார்கள் இந்த மண்ணில் என்ற வினா தொக்கி நிற்கிறதல்லவா? அதனால் நாவலின் வாழ்க்கை இன்னும் முடிவுறவில்லை. அது ஒரு பெருங்கதையாடலாக நீளும் தருணம் அதிகம்.எனவே நாவலுக்கு முற்றுப்புள்ளியை வலிந்து வைக்கவேண்டியதாயிற்று.
உதயா : முனைவர் ரெ.கார்த்திகேசு ஐயா இந்நாவல் தமிழ் எழுத்துலகுக்குக் கிடைத்த கணிசமான கொடை என வர்ணித்திருக்கிறார்.இந்நாவல் நம் இந்தியர்களிடையே எத்தகைய தாக்கத்தைத் தரவல்லது என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?இந்தக் கதைக்களம் உருவானதன் பின்னணி பற்றியும் சொல்லுங்களேன்?
புண்ணியவான் : சிவப்பு அடையாள் அட்டையால் மக்கள் பட்ட, படப்போகும் துயரம் பதிவாகிறதல்லவா? அந்த வரலாறு சொல்லப்படவேண்டிய ஒன்றுதானே?இந்நாவல் இதுவரை யாரும் எழுதாத ஒரு நிதர்சனத்தைக் காட்டுகிறது. நாடற்றவர்கள் நிலைமையைத்தான் மையமாக பிடித்துக்கொள்கிறது. குடியுரிமையற்றவர்கள் எத்தனை இன்னல்களுக்கு ஆளானார்கள். இன்னமும் ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை முன்னெடுக்கிறது.இதன் கதைக்களம் நாவல் உலகுக்குப் புதிது. இன்னொரு விசயமும் உண்டு. இந்தக் குடியுரிமை சிக்கலில் நானும் ஆளானேன். ரப்பர், செம்பனை தோட்டத்திலும் நான் வேலை செய்திருக்கிறேன். எனவே இது என்னை நேரடியாகப் பாதித்த களம்.
உதயா : இதுபோன்ற அவலங்களைப் படமாக எடுத்தால் ஏதேனும் சிக்கல் வரக்கூடுமா ஐயா?
புண்ணியவான் : நம் மண்ணின் வாசனையை அறிந்த சரியான இயக்குனர் வேண்டும்.ஏன் சிக்கல் வரும்? வராது. வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல இயக்கவேன்டும்
உதயா : நம் முன்னோடிகள் எப்படியெல்லாம் பாடுபட்டு வந்து இந்நாட்டில் வாழ்க்கையைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் உணராமல் வன்செயல்களில் ஈடுபட்டு வரும் இளைய சமுதாயம் இதுபோன்ற நாவல்களை வாசித்தால் கொஞ்சமேனும் மாற்றம் வராதா?
புண்ணியவான் :அவனுங்க முதலில் வாசிக்கணும். இங்கே வாசகனே குறைவு இல்லையா? அவர்களை வழிநடத்த சரியான தலைமைத்துவம் வேண்டும் முதலில்.சரி நாவலை நன்றாக உள்வாங்கி இருக்கிறீர்கள் என்பது உங்கள் கேளிவிகளிலிருந்து புலனாகிறது.ஆமாம் கெட்ட வார்த்தை பற்றி கேட்கவில்லையே நீங்கள்?
உதயா : கெட்ட வார்த்தையைப் பற்றி கட்டாயம் கேட்கவேண்டும் என்றுதான் நினைத்தேன்.நாவலிலோ,சிறுகதையிலோ கண்டிப்பாக கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றுதான் ஆகவேண்டுமா ஐயா?பின்நவீனத்துவம் என்றால் மதம்,இனம்,கட்டுப்பாடு,பண்பாடு எல்லாவற்றையும் உடைத்தெறிந்துதான் எழுதவேண்டுமா? ஒரு சிறுகதையிலோ,புதினத்திலோ கண்டிப்பாக ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுதான் ஆகவேண்டுமா?
புண்ணியவான் : என் நாவலில் இடம்பெற்ற கெட்டவார்த்தைகள் உண்மையில் பயன்படுத்தப் பட்டன சில பத்திரத்தில். அதனை மறைத்து எழுதினால் நாம் அந்த அவலத்தை மறைத்தோம் என்றாகிவிடும். அதனால் அவர்கள் எதிர்நோக்கிய சிரமம் திட்டமிட்டே மறைப்பதாக ஆகிவிடும் அல்லவா?அதனால் இந்நாவலில் ஒரு சில கெட்ட வார்த்தைகளின் பிரயோகம் அவசியமாகிறது. கெட்ட வார்த்தையால் வாசகனுக்குப் படிமத்தை உருவாக்க முடியுமானால் எழுதலாம்.பின்நவீனத்துவம்  என்பது இதுவரை இருந்த கதை சொல்லும் மரபை, கதையின் உள்ளீட்டை உடைத்து எழுதுதல் ஆகும். இதனை ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசலாமே  மருமகளே.
உதயா: அடையாள அட்டையில் பெயர் மாற்றி எழுதப்பட்ட சம்பவங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் தரக்கூடிய ஒன்று.ஆனால் அதையும் மீறி சிரித்துவிட்டேன்..ஒருவேளை நீங்கள் எழுதிய விதம் சிரிப்பை மூட்டியிருக்கலாம்.உங்களிடத்தில் எப்போதும் நகைச்சுவையுணர்வு அதிகமிருக்கும்.இந்நாவலில் அடையாள அட்டையில் பெயர் மாற்றம் தந்த விளைவுகளை நீங்கள் புகுத்திய இடத்தில் உங்கள் நகைச்சுவை உணர்வு வெளிப்பட்டுவிட்டது.
புண்ணியவான் : நன்றி மா
உதயா :இறுதியாக நாவலைவிட்டு விலகி ஒரு கேள்வி.இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர்களின் ஆற்றல் குறித்து??
புண்ணியவான்: இளைய தலைமுறை எழுத்தாளர்கள் மலேசியாவில் முன்பைவிட நிறைய உருவாவார்கள். எங்கள் காலக்கட்டத்தில் வெறும் காகித ஊடகமே கிடைத்தது. அதிலும் நல்ல தமிழ்நாட்டு நூல்கள் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் விலை அதிகம். வாங்க வக்கிருக்காது. ஆனால் இன்றைக்கு கணினி பெரும் நூலகமாக உருவெடுத்திருக்கிறது. அதனால் நல்ல ஆற்றல்மிக்க இளம் எழுத்தாளர்கள் வருவார்கள் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்.
உதயா : உங்கள் நம்பிக்கைக்கு நன்றி ஐயா.உங்கள் நாவல் குறித்த சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.கருப்பு மையில் எழுதப்பட்ட சிவப்பின் பிரதிநிதி என நீங்கள் குறிப்பிட்ட வாசகத்தையே இந்த உரையாடலுக்குத் தலைப்பாக இடுகிறேன்.
புண்ணியவான் : நன்றி மா.

சந்திப்பு : உதயகுமாரி கிருஷ்ணன்,பூச்சோங்