Saturday, October 5, 2013

சிறுகதை - பெண்மை

சிறுகதை


பெண்மை



 

       அந்தி சாயும் நேரம்.சாயங்கால பறவைகள் சத்தமாய் எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தன.ஆள் அரவமற்ற அந்த ஒற்றையடிப் பாதையில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தாள் அகல்யா.தனிமையும்,இளமையும் அவளுடைய பயத்தைக் கொஞ்சமாய்த் தூண்டிவிட நடையில் வேகத்தைக் கூட்டினாள்.
     வழக்கமாக அவளைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு போகும் தோழி அன்று வேலைக்கு வரவில்லை.பேருந்திற்கு காத்திருந்தால் தாமதமாகிவிடும் என்றுதான் குறுக்குப் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.சில அவசர வேளைகளில் நேரத்தை மிச்சப்படுத்த எண்ணுவது இயல்புதானே? அதுவுமில்லாமல் சில நிமிடங்களில் என்ன ஆபத்து நிகழ்ந்து விட போகிறது என்ற குருட்டு நம்பிக்கை வேறு.எனவே,எதைப் பற்றியும் யோசிக்காமல் நடக்க ஆரம்பித்தாள் அவள்.ம்ழை மெல்லிய கீதம் இசைக்க ஆரம்பித்தது.கைப்பையிலிருந்த சிறுகுடையை விரித்து நடந்தாள்.
     கொஞ்ச தூரம் நடந்த பிறகு பேசாமல் காத்திருந்து பேருந்திலேயே வந்திருக்கலாமோ என்றொரு நெருடல் அவளை வருடியது.இருப்பினும் பாதி தூரத்தைக் கடந்தாகிவிட்டது.இன்னும் பத்து நிமிடம் நடந்தால் கடைத்தெரு வந்துவிடும் என்று தன்னை தைரியப்படுத்திக் கொண்டு நடந்தாள்.
   பின்னால் ஏதோ மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது.அவளுடைய இதயம் படபடவென அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.மனதிற்குள் திடீர் பயமொன்று உற்பத்தியானது.தோளில் மாட்டியிருந்த கைப்பையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.ஆனால் அவளை முந்தி கொண்டு அவள் முன்னால் வந்து நின்றது அந்த மோட்டார் சைக்கிள்.
    என்னா பொண்ணு, தனியா போற? துணைக்கு வரட்டுமா?” மோட்டார் சைக்கிளில் வந்த அந்த இந்திய இளைஞன் கிண்டலாய்க் கேட்டது காதில் விழுந்தும் ஒன்றும் விளங்காதமாதிரி நடக்க எத்தனித்தாள்.அவன் அவளைப் போகவிடாமல் குறுக்கே நின்றதோடு அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான்;இடுப்பைக் கிள்ளினான்.அவள் கையிலிருந்த குடை அவன் காலடியில் விழுந்தது.அவள் அவனோடு போராட முடியாமல் தோற்றுப் போனாள்;தன்னை விட்டு விடும்படி கெஞ்சினாள்.அவன் கேட்பதாய் இல்லை.அவள் அவனை இலேசாய் முறைத்தாள்.
   என்னடி முறைக்கிற? நீ என்னா ஐஸ்வர்யா ராயா?” அவன் நக்கலாய்க் கேட்டான்.ஏன்? ஐஸ்வர்யா ராய்க்கு மட்டும்தான் முறைப்பதற்கு உரிமை இருக்கிறதா?நடிகைகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை கூட தன்னைப் போன்ற சராசரி பெண்களுக்குக் கிடைப்பதில்லையே என்று மனம் நொறுங்கி போனாள்.அவனிடம் கோபப்பட்டு பேசுவதில் பயனேதுமில்லை என்று புரிந்தது.மீண்டும் கெஞ்சினாள்.ஆனால் அது கேட்பதாக இல்லை.அவளுடைய கைகளை முரட்டுத்தனமாக பிடித்து இழுத்தது.அவளுடைய தோளில் கையை வைக்க முனைந்தது.
    அகல்யா நடுங்கிப் போனாள்.சுற்றும் முற்றும் பார்த்தாள்.கண்ணுக்குத் தெரிந்த வரையில் எந்த மனித நடமாட்டமும் இல்லை.அவனிடமிருந்து தப்புவது கடினமே என புரிந்து போனது.அவளுக்குப் பத்திரிக்கைகளில் படித்த சம்பவங்கள் யாவும் நினைவிற்கு வந்தன.திரைப்படங்களில் காட்டப்படுவதுபோன்று தன்னைக் கதற கதற கற்பழிக்க போகிறானா? கற்பழிக்க அவகாசம் இல்லையென்றாலும் குறைந்தபட்சம்..... அவளால் அதற்கு மேல் யோசிக்கமுடியவில்லை;பயத்தில் மெல்ல பின்னால் நகர்ந்தாள்.
   எங்க போற?என்கிட்ட இருந்து அவ்வளவு சுலபமா தப்பிச்சிடலாம்னு நினைக்கறியா?” கேலியாய்ச் சிரித்தான்.ஆனாலும் அவன் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்காமலேயே பேசிக்கொண்டிருந்ததால் தப்பித்து ஓட சிறிதளவேனும் வழியுண்டா என யோசித்தவாறு பின்னால் பார்த்தாள்.அவனும் பார்த்தான்.மீண்டும் நகைத்தான்.
    அவள் கெஞ்சினாள்.
    உங்களுக்குக் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?உங்க தங்கச்சியை யாராவது இப்படி பண்ணினா உங்களால தாங்கிக்க முடியுமா?” தன் வார்த்தைகள் அவனைச் சற்றேனும் யோசிக்கவைக்காதா என எதிர்பார்த்தவள் ஏமாந்து போனாள்.
    இது எனக்கும்,உனக்கும் நடப்பது,எதுக்காக என் குடும்பத்தை இழுக்கற?” அவன் கோபமானான்.ஓ அவன் தங்கையைப் பற்றிப் பேசினால் அவனுக்குக் கோபம் வருகிறதோ?இவளும் ஒருவனுக்குத் தங்கைதானே?” ஆத்திரம் வந்தபோதும் அவளால் அதை வெளிப்படுத்த இயவில்லை.
  அதற்குள் அவன் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கிவிட்டிருந்தான்.இதற்கு மேல் அந்த மிருகத்திடமிருந்து தப்புவது சாத்தியமில்லை என்று அவளுக்குத் தெளிவாகப் புரிந்து போனது.இனி அவளை யாருமே காப்பாற்ற முடியாது.சூடான மெழுகுவர்த்தியில் ஒட்டிக்கொண்ட ஈசலைப் போன்று தன் நிலையை எண்ணி துடித்துப்போனாள். முடிகளால் நிறைந்திருந்த அவனுடைய முரட்டுத்தனமான கை அவள் தோள்பட்டையிலிருந்து மெல்ல மெல்ல கீழே இறங்கியது.இறைவனை நினைத்துக்கொண்டு சத்தமாக கத்தியேவிட்டாள்.
    திடீரென நான்கைந்து மோட்டார் சைக்கிள்கள் வரும் சத்தம் கேட்டது.அது அவசர அவசரமாய் அவளை விட்டுவிட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டது.அவளுக்கோ உடல் முழுவதும் வியர்த்து விட்டிருந்தது.நடுமுதுகு நனைந்து போயிருந்தது,மின்சார தாக்குதலுக்கு ஆட்பட்டதைப் போன்று உடல் திடீர் திடீரென தூக்கி வாரிப்போட்டது;மூச்சிறைத்தது;உடல் ஒரு மெல்லிய நடுக்கத்திற்கு ஆட்பட்டிருந்தது.அங்கு நிற்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து போல் இருந்தது.சுயநினைவே இல்லாததுபோன்று ஓட்டமும்,நடையுமாய் எப்படியோ வீடு வந்து சேர்ந்தாள்.அதன் பின்பும் அவளுடைய நடுக்கம் குறையவில்லை.குளியலறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.அவள் இயல்பிலேயே மிகவும் மென்மையான மனம் படைத்தவளாதலால் அதிகமாகவே பயந்து விட்டிருந்தாள்.கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்ட ஆரம்பித்திருந்தது.
  ஷவரை வேகமாக திறந்து வைத்து உடலை நனைத்தாள்.நெடுநேரம் குளித்தாள்.அவன் தொட்ட இடம் யாவும் அருவெறுப்பாய் இருந்தது.அவள் பயிற்றுப்பணியில் இருக்கும் ஒரு தாதி.ஆண் நோயாளிகளைத் தொட்டு பணிவிடை செய்து மருந்திட்டிருக்கிறாள்.அப்போது தோன்றாத ஓர் அருவெறுப்பு சற்று முன் அந்த மிருகம் தொட்டதால் தோன்றியிருந்தது.
  அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை.காரணமின்றி அழுகை அழுகையாக வந்தது.உடல் முழுவதும் கூசுவதுபோல் இருந்தது.அடிமனதில் பயம் இன்னும் இருந்து கொண்டே இருந்தது.உடல் இன்னமும் நடுங்கி கொண்டிருந்தது.  
      அந்த மோட்டார் சைக்கிள்கள் மட்டும் அந்நேரத்தில் வராமல் இருந்திருந்தால்……அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவளுடைய எண்ணங்கள் தாறுமாறாய்ச் சிதறி ஓடின.

    அவன் சாதாரணமான தொட்டதே தன்னை இந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்றால் எத்தனையோ பெண்கள் கொடூரமான முறையில் கற்பழித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்களே? அந்தச் சமயத்தில் அவர்களுடைய மனநிலை,உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்? கென்னி ஓங் போன்றவர்களெல்லாம் எப்படி கதறித் துடித்திருப்பார்கள்?கடைசி நிமிடம் வரை யாராவது தங்களைக் காப்பாற்ற வருவார்களா என்று  எப்படியெல்லாம் எதிர்பார்த்து,வேண்டி தவித்திருப்பார்கள்?அவர்களுக்குள்ளும் கடைசி நம்பிக்கை,கடைசி எதிர்பார்ப்பு எல்லாம் சிறிதளவேனும் இருந்திருக்கும்தானே?பொய்யாய்ப் போன நம்பிக்கையோடு கணநேர வேதனைக்குப் பிறகுதானே உயிரை விட்டிருப்பார்கள் என்பதை அவளால் அப்போது உணர முடிந்தது.
     ஒருமணி நேரத்திற்கு மேல் தண்ணீரிலேயே நனைந்தவள் அம்மா அழைத்ததும் குளியலறையிலிருந்து வெளிப்பட்டாள்.
    ஏற்கனவே மழைல நனைஞ்சிட்டு,இவ்ளோ நேரம் குளிச்சா என்னவாகறது?” அம்மாவின் கரிசனம் பொங்கும் குரல் அவளை அழவைத்துவிடும் போலிருந்தது.இவளுக்கு நடந்ததை அறிந்தால் பாவம் அம்மா எப்படி துடித்துப் போவாள்?அதனால் அம்மா சந்தேகப்படாமல் இருப்பதற்காக சாப்பிட அமர்ந்தாள்.ஒரு வாய் சோறு இறங்கியதும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்ட ஆரம்பித்தது.எப்படியோ சமாளித்து சாப்பிட்டு எழுந்தவள் உடனே படுக்கையறைக்குச் சென்றாள்.

    ஆனால் அவளால் உறங்கவே முடியவில்லை.மீண்டும் மீண்டும் அந்தச் சம்பவம் அவள் நினைவில் வந்து கொண்டே இருந்தது.என்ன கேட்டான்? நீ என்ன ஐஸ்வர்யா ராயா?” என்றல்லவா கேட்டான்.ஒரு வேளை ஐஸ்வர்யா ராயாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பானாம்?காலில் விழுந்து வணங்கியிருப்பானோ? இப்போது அவளுடைய பயம் கோபமாக மாறிப்போயிருந்தது, காரணமின்றி ஐஸ்வர்யா ராய் மீது கோபம் வந்தது. ஆண் வர்க்கத்தின்மேலும் அளவிலா கோபம் வந்தது.
     என்னதான் பெண்களுக்கான சம உரிமை குறித்த சர்ச்சைகள் எழுந்தாலும் ஒரு சில ஆண்களின் கண்களுக்குப் பெண் என்பவள் வெறும் காமப்பொருளாகதானே தெரிகிறாள்?இது மாதிரி வக்கிரமான ஆண்கள் எப்படி பெண்களுக்கான சமஉரிமையைப் பற்றி நினைத்துப் பார்ப்பார்கள்?ஒரு கவிஞர் தன் கவிதையில் காய்கறிகளில் பாதியும்,பெண்களில் பாதியும் சமையலறையிலேயே சமாதியாகிவிடுவதாக குறிப்பிட்டுள்ளதைப் போன்று இந்த வக்கிரக்காரர்களின் சிந்தையில் பெண் என்பவள் படுக்கையறையிலேயே சமாதியாகப் போகிறவள்தானோ?
     பெண்ணாசையை அடக்க முடியவில்லையென்றால் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே? இல்லையென்றால் பணத்திற்காக மோசம் போகும் பெண்களிடம் போகவேண்டியதுதானே?தெருவில் போகும் பெண்களை ஏன் சீண்ட வேண்டும்?” அவள் எதையெதையோ சிந்தித்தவாறு புலம்பி கொண்டிருந்தாள்.கவலை,அருவெறுப்பு,பயம், கோபம்,ஆக்ரோஷம் என பல்வேறு உணர்ச்சிகளின் பரிமாணங்களில் சிக்கிச் சுழன்று கொண்டிருந்தாள்.
  மனதைரியமுள்ள பெண்களாக இருந்தால் நடந்ததையெல்லாம் எப்போதோ மறந்துவிட்டு பெரிதாக எதுவும் நடக்காததை எண்ணி இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பார்கள்.ஆனால் எல்லா பெண்களுடைய மனநிலையும் ஒரே மாதிரி இராதே?மிகவும் இளகிய மனமும்,கூச்ச சுபாவமும் படைத்த அகல்யாவை அந்தச் சம்பவம் மனதளவில் பெரிதும் பாதித்துவிட்டிருந்தது.
    அகல்யா கோபத்தின் விளிம்பில் இருந்தாள்.நடந்து முடிந்ததை நினைத்து அழாமலிருப்பதற்கு அவள் தன்னுடைய கோபத்தைக் தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.அவன் கையில் கிடைத்தால் அவனைக் கண்டந்துண்டமாக வெட்டி கதற கதற சாகடிக்க வேண்டும்போல் இருந்தது.அவனிடம் பேசுவதாய் நினைத்துக்கொண்டு கோபத்தில் ஏதேதோ அரற்றினாள்.
    விடிய விடிய அவள் உறங்கவே இல்லை.புலம்பி புலம்பி காய்ச்சல் வேறு.நல்லவேளையாக அன்று மதிய வேலை என்பதால் சற்று ஓய்வெடுத்துவிட்டுக் கிளம்பினாள்.
   அகல்யா, இங்க வாம்மா,” தலைமை தாதி அழைக்கவே அவரை நெருங்கினாள்.
   ஏழாம் நம்பர் பேஷண்டுக்கு நேத்து சாயந்திரம் நடந்த ஒரு விபத்துல ஒரு கையும் ஒரு காலும் முறிஞ்சு போச்சி,இன்னைக்கு அவரைதான் நாம் கவனிக்கனும்,நீ வார்டுக்குப் போ,நான் வாஷ்ரூம் போயிட்டு வர்றேன்
    அகல்யா ஏழாம் எண் அறைக்குள் நுழைந்தாள்;மறுகணம் அதிர்ந்தாள்.அங்கே படுத்திருந்தவன் வேறு யாருமல்ல,முன்தினம் அவளிடம் சில்மிஷம் செய்தவன்தான்.

     மெல்ல அவனை நெருங்கினாள் அகல்யா …..


                                                 உதயகுமாரி கிருஷ்ணன்.
                                                         பூச்சோங்

No comments:

Post a Comment